ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

யானைகளின் உயிர் அவ்வளவு மலிவானதுவா

மரணப் போராட்டத்தில் உயிரினங்கள்?

எம்.எஸ்.செல்வராஜ்

natpu
இயற்கையின் கோரத் தாண்டவம் இன்று உலகையே உலுக்கியிருக்கிறது. தமிழகக் கரையெங்கும் பிணங்கள் அழுதி மிதக்கின்றன. காற்றெங்கும் மரண ஓலம்... என்ன செய்வதென்றறியாமல் திகைத்து நிற்கும் மக்கள். இதற்கு யார் காரணம்?
இயற்கை மட்டுமா? ஏன் இந்த திடீர் சீற்றம்! இது கரைக்கு மட்டும்தானா? நாளை நமக்கும் வராதா? உலகெங்கும் அணு உலைகள். ஜப்பானில் 1942ல் ஹிரோஷிமாவில் துவங்கி இன்று பொக்ரான் புத்தர் சிரிப்புவரை பல அணு வெடிப்புகள், கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகள் அமெரிக்காவின் யுத்தத் தாண்டவம் வல்லரசுகளின் ஆயுதபேரம், வேதியியல் கழிவுகள், பெட்ரோல் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், நகரமெங்கும் காங்கிரீட் காடுகள், ஆற்றில் மணல் கொள்ளை, காடழிப்பு, கடலில் கழிவைக் கழித்தல், கடலில் அணுகுண்டு சோதனை, பயிரெங்கும் பூச்சிக்கொல்லி, தண்ணீரில்லாமல் அணைக்கட்டுகள் திட்டம்... இப்படியிருந்தால் அப்புறம் ஏன் இயற்கை திருப்பி அடிக்காது.
இந்த நிலையில் நடந்திருக்கும் அனுபவங்களை பாடமாக எடுத்து ஆய்வு செய்வது அவசியம். இயற்கையாக ஏற்படும் சீற்றத்திலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் சமன்பாட்டில்தான் பூமி அமைந்திருக்கிறது. இதை நுணுக்கமாக புரிந்து கொண்டு இயற்கையுடன் இணைந்து வாழும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது அவசியம்.
பூமி அதிர்வு, கடல் கொந்தளிப்பு, சுனாமி, பூகம்பம், பூமி வெடிப்பு, மண் சரிவு, வெள்ளம், புயல், கடும் வறட்சி போன்ற அனைத்து சீற்றங்களையும் முன்கூட்டியே அறிந்து, பாதுகாப்பான வழிமுறைகளை மேற்கொள்ளும் ஆற்றல் காட்டுயிர்களுக்கு உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். கோரத்தாண்டவ சுனாமியில் இருந்து சில சம்பவங்களை கூர்ந்து கவனிப்பது அவசியம். சுனாமி ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வன விலங்குகள் என்றும் இல்லாதவாறு வித்தியாசமான ஒலிகளையும், செயல்பாட்டையும் செய்திருக்கின்றன.
“இயற்கையிலிருந்து அந்நியப்பட்டு போன மனிதனுக்கு இதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அழிந்து போய்விட்டது.” இந்த சுனாமியால் வன விலங்குகள் பாதிக்கப்படவில்லை. அந்தமான் தீவுப் பகுதியில் பவளப்பாறைகளும், அடர்ந்த காடுகளும் உயிரினங்கள் தப்பிக்கக் காரணமாக இருந்துள்ளது. இந்த வகையில் மனித வாழ்வுக்கு மிக அடிப்படையாக இருப்பவை காட்டுயிர்கள்.
இதன் கதி என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம். மேலும் தொடர

http://www.natpu.in/natpu/Pakudhikal/Nam%20Samookam/animals.php

வெள்ளி, 30 ஜூலை, 2010

இன்றைய நடிகன் நாளைய தலைவன்

பாருங்கள் மணா பகுதிகள்


குழந்தைகளும் ஸ்திரீகளும் சினிமா பார்க்கக் கூடாது

நாளுக்கு நாள் ஆடவர்களைவிட ஸ்திரீகள் சினிமா பார்ப்பதுதான் அதிகரித்து வருகிறது. இப்போக்கை உடனே மாற்ற வேண்டும். தற்போதைய படங்களில் உயர்தர ரகத்தைச் சேர்ந்தவை என்று கூறக்கூடியவை நூற்றுக்குப் பத்துதான் தேறும். பாக்கியுள்ளவைகளிலெல்லாம் ஆபாசக் காட்சிகள் தலைவிரித்தாடுகின்றன. ஆதலால் தற்போதைய நிலையில் சினிமாவினால் சொற்ப நன்மையும், அதிக தீமையுமே ஏற்படுகிறது என்பது என் அபிப்ராயம். இப்படியிருக்க நம் ஸ்திரீகளும், குழந்தைகளும் இப்படங்களைப் பார்த்தால் எப்பெருங்கெடுதல் ஏற்படும் என்பதைக் கவனியுங்கள்.....

மேலும் படிக்க
http://www.natpu.in/natpu/Pakudhikal/Manaa%20Pakkankal/rasigan.php#HCB_comment_பாக்ஸ்

சீமானுடன் ஒரு நேர்காணல் -- மணா

சிறையில் எப்படி இருக்கிறார் சீமான்? - சிறப்புச் சந்திப்பு

ஊர் சுற்றிக்குறிப்புகள் - 3


எத்தனையோ கூட்டங்களில் அவர் ஆவேசத்துடனும், தார்மீக வேகத்துடனும் பேசியதைக் கேட்க முடிந்திருக்கிறது. மேடையில் பேசுகிறபோது உணர்வுவயப் பட்ட இன்னொரு உலகத்திற்குள் அவர் நுழைகிற மாதிரி இருக்கும். நேரடியாக எப்போது பார்த்தாலும் இயல்பான கரகரத்த குரலில் ராமநாதபுரத்துத் தமிழில் அவர் விசாரிப்பது மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.

இப்படிப்பட்ட நண்பரும், இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் அடிக்கடி கைது செய்யப்பட்டாலும் இம்முறை சென்னையில் மீனவர் பிரச்சினைக்காக அவர் பேசிய பேச்சுக்காக தேசியப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்த விதம் கவலைப்பட வைத்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மத்தியச்சிறைக்கு முன்னால் இன்றைய முதல்வரான கருணாநிதி கைது செய்யப்பட்டு அதிகாலை நேரத்தில் கைலி கட்டியபடி சிறைவளாகத்திற்கு முன் அமர்ந்திருந்தபோது பத்திரிகையாளனாக அந்த இடத்தில் இருந்தேன். சிறைத்தண்டனை அவர்களுடைய செயல்பாடுகளிலிருந்து வலுக்கட்டாயமாகத் துண்டித்து அவர்கள்படும் அவதியையும், காவல் நிலையத்தில் ஒருவருடைய குடும்பம் என்னென்ன இன்னல்களுக்கு ஆட்படக்கூடும் என்பதையும் விடிந்தும் விடியாத பொழுதில் இருந்து பார்த்த அனுபவம் இன்னும் நினைவில் கறை மாதிரிப் படிந்திருக்கிறது. மறைந்த முரசொலி மாறன் அன்றைக்கு அதிகாலை காவல் நிலையத்தில் பட்டபாட்டை நேரடியாகப் பார்த்த அனுபவம் முள் தைத்த வலியை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சித்தலைவராக இருந்த கலைஞர் சிறையிலிருந்து விடுதலை ஆனதும் சி.ஐ.டி காலனி வீட்டில் நான் முதலில் சந்தித்து வாரமிருமுறை இதழுக்காகப் பேட்டி கண்ட போது கொந்தளிப்புடன் அவர் சொன்னார். ''இனியும் கைதுகள் தொடர்ந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்.'' அவர் அன்று அனுபவித்த வலி அந்தச் சொற்களை வரவழைத்திருக்கலாம்.

அந்த வலியை உணர ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, வயதானவர், இளைஞர், பெண், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர் என்கிற பேதங்கள் வேண்டியதில்லை. வலிந்து ஒருவரைச் சிறைக்குள் தள்ள முற்படுகிறபோது அடைகிற மனத்தத்தளிப்பை இன்றைய முதல்வரிலிருந்து பலரும் ஏதோ ஒரு கணத்தில் அழுத்தமாக உணர்ந்திருப்பார்கள். சராசரியான மனித உரிமை நசுங்கும்போது எழும் அழுத்தம் அது.
வேலூர் சிறைக்கு இதற்கு முன்னால் சிறைப்பட்டிருந்த வைகோவைச் சந்திக்க சின்னக்குத்தூசி அவர்களுடன் சேர்ந்து போயிருக்கிறேன். சிறைக்குப் பக்கவாட்டில் இருக்கிற அறையில் ஜெயிலரின் கண்காணிப்பின்கீழ் பேசி விட்டு வந்த அனுபவத்திற்குப் பிறகு மீண்டும் அதே வேலூர் சிறை. முன்னால் அந்தக்காலத்தில் சிறைப்பட்டிருந்த தியாகிகளுக்கான உயர்ந்த நினைவுச்சின்னம். காலத்தின் பார்வையில் பின்னாளில் ஒருவர் தியாகியாக மதிக்கப்பட்டாலும் –சிறை வளாகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு நபரும் கைதிதான்.

சிறை வாசலில் சீமானின் 'நாம் தமிழர்' இயக்கத்து இளைஞர்கள் கூடியிருந்தார்கள். வியாழக்கிழமை மட்டும்தான் அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தது. வழக்கமான விசாரிப்புகள், கொண்டு போயிருந்த புத்தகங்கள் வரை சோதனையிட்ட பிறகு சிறை அதிகாரிகள் முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த சீமான் எழுந்து கை கொடுத்துத் தோழமையான புன்னகையுடன் வரவேற்றார்.
வழக்கமாக அணியும் கறுப்பு டி-சர்ட்டும், கறுப்பு பேண்ட்டும்தான். சிறையில் இருந்த நடமாட்டங்களும், சுற்றிலும் கேட்டுக்கொண்டிருந்த கைதிகளின் ஆஜர் படுத்தும் சப்தங்களும், சற்றுத் தொலைவில் அதிகாரிகள் கண்காணிப்பும் சூழ்ந்த நிலையில் பேச்சை இயல்பானதாக மாற்றமுடியவில்லை.

''அரசு வசதியுடன் வைத்திருப்பதாக அறிக்கை எல்லாம் விடுகிறதே. இங்கே எப்படி இருக்கீங்க?" கேட்டதும் -முகம் சலித்தபடி சொல்கிறார் சீமான்.
''இப்போ மனுப்போட்டு மத்தவங்களைப் பார்க்குறதுக்காக வர்ற நேரத்தைத் தவிர மத்த நேரம் எல்லாம் தனி அறையில்தான் வைக்கப்பட்டிருக்கேன். காலையிலும், மாலையிலும் ஒருமணிநேரம் சிறை வளாகத்திற்குள் நடக்க அனுமதி கேட்டும் இதுவரை தரப்படலை.. என்ன சொல்ல?"

மற்றவர்களுடன் பேசுவதில் உற்சாகம் கொள்பவர்களைத் தனித்த அறையில் அடைப்பது சிறை என்கிற வளாகத்தின் மீதிருக்கும் இறுக்கத்தைக் கூட்டுகிறது.

அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த யாரையும் துன்புறுத்துவது -பகிர்ந்து கொள்ள யாருமற்ற தனிமைதான். சில நேரங்களில் தனிமை கூடத் தண்டனை மாதிரி ஆகிவிடுகிறது. முகம் நம்மைப்பார்த்தபடி இருந்தாலும் -அவருடைய கண்கள் அந்த அறையில் வந்து போகிறவர்களைக் கவனித்தபடி இருக்கின்றன. அடிக்கடி விரல்களால் முகத்தை நீவிவிட்டுக்கொள்கிறார்.
"தமிழக மீனவர்கள் பிரச்சினையைப் பேசினதுக்காக -அதுவும் தமிழ்நாட்டில் தமிழர்களாலேயே கைது செய்யப்பட்டிருக்கேன். ஏதோ ஒரு காரணத்துக்காக - யாரையோ திருப்திப்படுத்த என்னைக் கைது பண்ணியிருக்காங்க. என் தரப்பு விளக்கத்தை தமிழ் மக்கள் கிட்டே சொல்ல முடியலை.. ஆனா.. நம்பிக்கை இருக்குங்க.. தமிழ் உணர்வாளர்கள் இருக்காங்க.. எத்தனையோ துடிப்பான இளைஞர்கள் இருக்காங்க.. தமிழ் உணர்வுள்ள ஊடக நண்பர்கள் இருக்காங்க.. அதனாலே அவங்க கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க..

முதலில் நான் கைது செய்யப்பட்டதும் கொஞ்ச நேரத்திலேயே என்னைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலே கைது செய்யப்போறாங்கன்னு தெரிஞ்சு போச்சு. வெளியில் என்னை விடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.. தனியா அடைச்சுட்டாங்க.. மத்த மனுசங்களைப் பார்த்துப் பேசுறதுன்னா இந்த மாதிரி நேரத்திலேதான் முடியுது"

பேசிக்கொண்டிருந்த அந்த அறைக்குள் கைதி உடையணிந்தவர்களை வரிசையாக அழைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். "தமிழ் மொழியே தெரியாதவர்களால் என்னைப் போன்றவர்களின் பிரச்சினையைப் புரிஞ்சுக்க முடியுமா? நம்ம மீனவங்க தாக்கப்படுறதைக் கண்டிச்சுப் பேசுனது தப்பா?" பெருமூச்சுடன் கேட்கிறார்.

வருகிறவர்களிடம் வெளியுலக நிலவரங்களைப் பற்றிக் கேட்கிறார். அரசியல் நிலவரங்களைப் பற்றி விசாரிக்கிறார். திரைப்பட உலகில் தமிழ் அடையாளத்துடன் படம் தயாரிக்கப்பட வேண்டும் என்கிற தவிப்பைச் சொல்கிறார். உரிமையுடன் ஊடகங்களில் இருக்கும் நண்பர்களைக் குறிப்பிட்டு விசாரிக்கிறார்.
''நிலைமை மாறும்ங்க.. நம்பிக்கை இருக்கு.. நம்ம நண்பர்கள் இருக்காங்க.. நம்ம மக்கள் இருக்காங்க..பார்ப்போம்.." கையை அழுத்தமாகப் பிடித்தபடி விடை கொடுக்கிறார்.

அவருடைய முகத்தில் மறுபடியும் அந்தப் புன்னகை.
புன்னகைக்குப் பின்னிருக்கும் வலியை நாம் உணர்வோமா?







தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நிள்ளடா, இது பழமொழி
தமிழனாய் இரு !அடிமையை இரு !
பணத்திற்கும் பதவிக்கும் இதுதான் தமிழக அரசின் நிலை.
மனம் தளர்ந்து விடாதிர் புரட்சியலரே
சோதனை

செவ்வாய், 27 ஜூலை, 2010

நட்பூ - அறிமுகம்

நட்பூ - நுழைவதற்கு முன்...

பல்வேறு ஊடகங்கள் மலிந்திருக்கிற நிலையில் - 'நட்பூ' இணைய இதழின் துவக்கம் குறித்த பிரகடனங்கள் எதையும் நாங்கள் சொல்லப்போவதில்லை. உலகளாவிய அளவில் சர்வதேச சமூகம் நெருக்கடியிலும், கையறு நிலையிலும் இருந்து கொண்டிருக்கும் நிலையில் - எளிமையும், உண்மையுமான செயல்பாடுகள் மட்டுமே இன்றையத்தேவை. சகல சீரழிவுகளுக்கும் எதிரான மாற்று என்ன என்பதைப் பற்றிய கருத்தோட்டங்களும்,நம்பிக்கைகளும் உருவாக வேண்டும் என்பதில் அக்கறையை உங்களுடன் சேர்ந்து நாங்களும் நட்புணர்வுடன் பகிர்ந்துகொள்கிறோம். திரைப்படம் உள்ளிட்ட படிப்பவர்களின் விருப்பம் சார்ந்த பல விஷயங்களை இணையத்தில் முன்வைத்திருக்கிறோம். காலம் சிலவற்றை சலிக்க வைக்கலாம். சக மனிதர்கள் மேல் அக்கறை கொண்ட மனசின் குரலாகச் செயல்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பமாக இருந்தாலும் - அதைச் சாத்தியமாக்குவது உங்களின் ஆதரவிலும் - பங்களிப்பிலும் தான் இருக்கிறது. உங்களுடைய ஒத்துழைப்பைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

-நட்பூ இணைய இதழ்

நிர்வாகம்:

தாய் குழுமம்

தாய் குழுமம், உணவு மற்றும் உணவு சார்ந்த துறைகள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் திரு. வள்ளியப்பன் அருணாசலம் அவர்களின் தலைமையின்கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு, வளர்ந்துவரும் குழும நிறுவனமாகும். திரு. வள்ளியப்பன் அருணாசலம் அவர்கள், வங்கித்துறையில் வணிக மேலாண்மைப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு, மேலும் பண வர்த்தகம், பங்கு வர்த்தகம் மற்றும் காப்பீடு போன்ற நிதித்துறைகளில் நல்ல அனுபவம் பெற்றவர். பலருக்கும் வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2006ம் ஆண்டு நிதி சார்ந்த துறையில் காலடி வைத்து, இன்று இவரது குழும நிறுவனங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைகிறார்கள். பல போராட்டங்களையும், சவால்களையும் சந்தித்த எளிமையான இவருக்கு, இவரின் விடாமுயற்சியே வெற்றிக்கு காரணமாகும். இளம் தொழில் அதிபரான இவருக்கு விடா முயற்சியும் தன்னம்பிக்கையுமே மூலதனம்

ஆசிரியர் குழு

மணா: துக்ளக், குமுதம், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், தீராநதி, புதிய பார்வை என்று தமிழகத்தில் உள்ள முன்னணிப்பத்திரிகைகளில் பணியாற்றிய பின்புலம் கொண்ட இவர் காட்சி ஊடகங்களிலும் கடந்த எட்டாண்டுகளாகப் பணியாற்றுகிறார். தமிழில் முதல் செய்தி நிறுவனமான ''அகிலா நியூஸ்'' என்கிற செய்தி நிறுவனத்தைத் துவக்கி நடத்தியவர்.

தமிழகத்தின் பல்வேறு தளங்கள் சார்ந்த புத்தகங்களை எழுதியிருக்கிற இவர் -நதிமூலம், தமிழ் மண்ணின் சாமிகள், தமிழகத்தடங்கள், ஊர் மணம், தமிழகம் -பிரச்சினைக்குரிய முகங்கள், தமிழகத் தொழில் முகங்கள், கனவின்பாதை, ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள், எம்.ஆர் .ராதா -காலத்தின் கலைஞன், ஆதிமூலம் அழியாக்கோடுகள், காற்றின் பக்கங்கள், தமிழர்கள் மறந்ததும் மறக்காததும், பழ.நெடுமாறனின் விரிவான நேர்காணல் அடங்கிய ''தமிழகத்தை வழிநடத்தும் புதுத்தலைமை உருவாகும்'' என்கிற நூல், தமிழகத்தின் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருக்கிறார். பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா நினைவு விருதையும் பெற்றிருக்கிற இவர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஊடக அனுபவம் கொண்டவர்.

இவர் ''நட்பூ'' இணைய இதழின் ஆசிரியப்பொறுப்பில் இருக்கிறார்.

கூத்தலிங்கம்: இந்திய வளர்ச்சி இயக்கம் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ‘யுரேகா நூலகம்’ என்னும் குழந்தைகளுக்கான படைப்பாற்றலை வளர்த்தெடுக்கும் திட்டத்தில் (2004-2006) மாநில உதவி ஒருங்கிணைப்பாளர். புதிய பார்வையில் (2006-2008) உதவி ஆசிரியர். ‘ஆகா டாக்கீஸ்’ என்னும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தில் (2008) நிகழ்ச்சி தயாரிப்பாளர். ‘அவ்வை’ என்னும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தில் நிகழ்ச்சி (2009) தயாரிப்பாளர். முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளும் சில சிறுகதைகளும், மொழிபெயர்ப்பு கதைகளும், மொழிபெயர்ப்பு கவிதைகளும், குழந்தைகளுக்கான படைப்புகளும் இவரது ஆக்கத்தில் முக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளன.


இந்த இணையஇதழில் இடம்பெறும் கருத்துக்கள் எழுதுகிறவர்களின் சொந்தக் கருத்துக்களே.
தொடர்புக்கு: natpoo.in@gmail.com