செவ்வாய், 27 ஜூலை, 2010

நட்பூ - அறிமுகம்

நட்பூ - நுழைவதற்கு முன்...

பல்வேறு ஊடகங்கள் மலிந்திருக்கிற நிலையில் - 'நட்பூ' இணைய இதழின் துவக்கம் குறித்த பிரகடனங்கள் எதையும் நாங்கள் சொல்லப்போவதில்லை. உலகளாவிய அளவில் சர்வதேச சமூகம் நெருக்கடியிலும், கையறு நிலையிலும் இருந்து கொண்டிருக்கும் நிலையில் - எளிமையும், உண்மையுமான செயல்பாடுகள் மட்டுமே இன்றையத்தேவை. சகல சீரழிவுகளுக்கும் எதிரான மாற்று என்ன என்பதைப் பற்றிய கருத்தோட்டங்களும்,நம்பிக்கைகளும் உருவாக வேண்டும் என்பதில் அக்கறையை உங்களுடன் சேர்ந்து நாங்களும் நட்புணர்வுடன் பகிர்ந்துகொள்கிறோம். திரைப்படம் உள்ளிட்ட படிப்பவர்களின் விருப்பம் சார்ந்த பல விஷயங்களை இணையத்தில் முன்வைத்திருக்கிறோம். காலம் சிலவற்றை சலிக்க வைக்கலாம். சக மனிதர்கள் மேல் அக்கறை கொண்ட மனசின் குரலாகச் செயல்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பமாக இருந்தாலும் - அதைச் சாத்தியமாக்குவது உங்களின் ஆதரவிலும் - பங்களிப்பிலும் தான் இருக்கிறது. உங்களுடைய ஒத்துழைப்பைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

-நட்பூ இணைய இதழ்

நிர்வாகம்:

தாய் குழுமம்

தாய் குழுமம், உணவு மற்றும் உணவு சார்ந்த துறைகள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் திரு. வள்ளியப்பன் அருணாசலம் அவர்களின் தலைமையின்கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு, வளர்ந்துவரும் குழும நிறுவனமாகும். திரு. வள்ளியப்பன் அருணாசலம் அவர்கள், வங்கித்துறையில் வணிக மேலாண்மைப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு, மேலும் பண வர்த்தகம், பங்கு வர்த்தகம் மற்றும் காப்பீடு போன்ற நிதித்துறைகளில் நல்ல அனுபவம் பெற்றவர். பலருக்கும் வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2006ம் ஆண்டு நிதி சார்ந்த துறையில் காலடி வைத்து, இன்று இவரது குழும நிறுவனங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைகிறார்கள். பல போராட்டங்களையும், சவால்களையும் சந்தித்த எளிமையான இவருக்கு, இவரின் விடாமுயற்சியே வெற்றிக்கு காரணமாகும். இளம் தொழில் அதிபரான இவருக்கு விடா முயற்சியும் தன்னம்பிக்கையுமே மூலதனம்

ஆசிரியர் குழு

மணா: துக்ளக், குமுதம், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், தீராநதி, புதிய பார்வை என்று தமிழகத்தில் உள்ள முன்னணிப்பத்திரிகைகளில் பணியாற்றிய பின்புலம் கொண்ட இவர் காட்சி ஊடகங்களிலும் கடந்த எட்டாண்டுகளாகப் பணியாற்றுகிறார். தமிழில் முதல் செய்தி நிறுவனமான ''அகிலா நியூஸ்'' என்கிற செய்தி நிறுவனத்தைத் துவக்கி நடத்தியவர்.

தமிழகத்தின் பல்வேறு தளங்கள் சார்ந்த புத்தகங்களை எழுதியிருக்கிற இவர் -நதிமூலம், தமிழ் மண்ணின் சாமிகள், தமிழகத்தடங்கள், ஊர் மணம், தமிழகம் -பிரச்சினைக்குரிய முகங்கள், தமிழகத் தொழில் முகங்கள், கனவின்பாதை, ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள், எம்.ஆர் .ராதா -காலத்தின் கலைஞன், ஆதிமூலம் அழியாக்கோடுகள், காற்றின் பக்கங்கள், தமிழர்கள் மறந்ததும் மறக்காததும், பழ.நெடுமாறனின் விரிவான நேர்காணல் அடங்கிய ''தமிழகத்தை வழிநடத்தும் புதுத்தலைமை உருவாகும்'' என்கிற நூல், தமிழகத்தின் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருக்கிறார். பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா நினைவு விருதையும் பெற்றிருக்கிற இவர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஊடக அனுபவம் கொண்டவர்.

இவர் ''நட்பூ'' இணைய இதழின் ஆசிரியப்பொறுப்பில் இருக்கிறார்.

கூத்தலிங்கம்: இந்திய வளர்ச்சி இயக்கம் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ‘யுரேகா நூலகம்’ என்னும் குழந்தைகளுக்கான படைப்பாற்றலை வளர்த்தெடுக்கும் திட்டத்தில் (2004-2006) மாநில உதவி ஒருங்கிணைப்பாளர். புதிய பார்வையில் (2006-2008) உதவி ஆசிரியர். ‘ஆகா டாக்கீஸ்’ என்னும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தில் (2008) நிகழ்ச்சி தயாரிப்பாளர். ‘அவ்வை’ என்னும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தில் நிகழ்ச்சி (2009) தயாரிப்பாளர். முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளும் சில சிறுகதைகளும், மொழிபெயர்ப்பு கதைகளும், மொழிபெயர்ப்பு கவிதைகளும், குழந்தைகளுக்கான படைப்புகளும் இவரது ஆக்கத்தில் முக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளன.


இந்த இணையஇதழில் இடம்பெறும் கருத்துக்கள் எழுதுகிறவர்களின் சொந்தக் கருத்துக்களே.
தொடர்புக்கு: natpoo.in@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக